search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணித பாட கேள்வித்தாள் அவுட்"

    கணித பாட கேள்வித்தாள் அவுட்டான விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பெண் ஊழியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். #AnnaUniveristy
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறுகூட்டலில் மதிப்பெண் போடுவதில் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.

    குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பல மடங்கு மதிப்பெண் போட்டதும், ஆயிரக்கணக்கில் பணம் கைமாறியதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய பெண் அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் உள்பட சிலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி என்ஜினீயரிங் கணிதம் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில் சில மாணவர்கள் நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அப்போது நடத்திய சோதனையில் மாணவர்களின் செல்போன் வாட்ஸ் அப்பில் கணித பாட கேள்வித்தாள் அவுட் ஆகி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சுரேஷ் குமார் என்ற என்ஜினீயரிங் மாணவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தனது உறவினர் மூலம் கணித கேள்வித்தாளை பெற்றதாகவும், அதை தனது நண்பர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் கூறினார்.

    இதையடுத்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்தது. உறவினர் மூலம் பெற்றுக் கொண்ட கேள்வித்தாளை அவர் தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த புதன்கிழமை மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


    முன்னதாக சுரேஷ் குமார் கூறுகையில், “தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தனது உறவினரான காஞ்சனா மூலம் கேள்வித்தாளை பெற்றதாக” தெரிவித்தார்.

    பெண் ஊழியரான காஞ்சனா கடந்த 13 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரை சுரேஷ்குமார் அணுகி தனக்கு கணித பாடம் கடினமாக இருப்பதாகவும் தேர்வின் போது கேள்வித்தாளை முன் கூட்டியே எடுத்துத்தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதற்கு காஞ்சனா சம்மதித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெண் ஊழியர் காஞ்சனாவையும் கைது செய்தனர்.

    காஞ்சனாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, பணத்துக்காக கேள்வித்தாளை அவுட் ஆக்கவில்லை. உறவினர் என்ற முறையில் தன்னை அணுகி உதவி கேட்டார். நானும் அவருக்கு உதவி செய்தேன் என்றார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காஞ்சனா மற்றும் கைதான மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்கிறார்கள். கோர்ட்டு அனுமதியுடன் 3 பேரிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அப்போது கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? ஏற்கனவே இது போன்று நடைபெற்று உள்ளதா? என்று விசாரணை நடத்தப்படும். #AnnaUniveristy
    ×